பொதுக்காலம் 32ஆம் வாரம் - செவ்வாய்
திருப்பலி நிறம்: பச்சை
WhatsApp பகிர்க Email
எழுத்து அளவு:

முதல் வாசகம்

நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது.

திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-8, 11-14

அன்பிற்குரியவரே,

நீயோ நலந்தரும் போதனைக்கேற்பப் பேசு. வயது முதிர்ந்த ஆண்கள் அறிவுத் தெளிவு, கண்ணியம், கட்டுப்பாடு உடையவர்களாய் இருந்து நம்பிக்கை, அன்பு, மன உறுதி ஆகியவற்றை நன்கு காத்துக்கொள்ளச் சொல். அவ்வாறே வயது முதிர்ந்த பெண்களும் தூய நடத்தை உடையவர்களாய், புறங்கூறாதவர்களாய், குடிவெறிக்கு அடிமை ஆகாதவர்களாய், நற்போதனை அளிப்பவர்களாய் இருக்குமாறு கூறு. இவ்வாறு கற்றுக் கொடுப்பதால் இளம்பெண்கள் தங்கள் கணவரிடமும் பிள்ளைகளிடமும் அன்பு காட்டி, கட்டுப்பாடும் கற்பும் உள்ளவர்களாய் வீட்டு வேலைகளைச் செவ்வனே செய்பவர்களாய்த் தங்கள் கணவருக்குப் பணிந்திருப்பார்கள். அப்பொழுதுதான் கடவுளுடைய வார்த்தை பழிப்புக்குள்ளாகாது.

அவ்வாறே இளைஞரும் கட்டுப்பாடு உள்ளவராய் இருக்க அறிவுரை கூறு. நற்செயல்களைச் செய்வதில் எல்லா வகையிலும் நீயே முன்மாதிரியாய் இரு; நாணயத்தோடும் கண்ணியத்தோடும் கற்றுக்கொடு. யாரும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத நலந்தரும் வார்த்தைகளைப் பேசு. அப்பொழுது எதிரிகள் நம்மைப் பற்றித் தீயன பேச எதுவுமின்றி வெட்கிப் போவார்கள்.

ஏனெனில் மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 37: 3-4. 18,23. 27,29 (பல்லவி: 39a)

பல்லவி: நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்தே வரும்.

3
ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ்.
4
ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். - பல்லவி

18
சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்; அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும்.
23
தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார். - பல்லவி

27
தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.
29
நேர்மையாளர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்; அதிலேயே என்றென்றும் குடியிருப்பர். - பல்லவி

நற்செய்தி வாசகம்

நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 7-10

அக்காலத்தில்

ஆண்டவர் உரைத்தது: “உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ‘நீர் உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, ‘எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வார் அல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.