பொதுக்காலம் 31ஆம் வாரம் - வெள்ளி
திருப்பலி நிறம்: பச்சை
WhatsApp பகிர்க Email
எழுத்து அளவு:

முதல் வாசகம்

மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 17- 4: 1

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் அனைவரும் என்னைப் போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே.

நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.

ஆகவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்கு உரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 122: 1-2. 4-5 (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரின் இல்லத்திற்குப் போவோம்.

1
“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

4
ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

நற்செய்தி வாசகம்

ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-8

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது.

தலைவர் அவரைக் கூப்பிட்டு, ‘உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.

அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப்போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார். பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.

நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.