இறந்த விசுவாசிகள் அனைவர்
திருப்பலி நிறம்: ஊதா
WhatsApp பகிர்க Email
எழுத்து அளவு:

முதல் வாசகம்

ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!

புலம்பல் நூலிலிருந்து வாசகம் 3: 17-26

அமைதியை நான் இழக்கச் செய்தீர். நலமென்பதையே நான் மறந்து விட்டேன்! ‘என் வலிமையும் ஆண்டவர் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையும் மறைந்துபோயின!’ என்று நான் சொல்லிக்கொண்டேன்.

என் துயரத்தையும் அலைச்சலையும், எட்டிக் காடியையும் கசப்பையும் நினைத்தருளும்! அதை நினைந்து நினைந்து என் உள்ளம் கூனிக் குறுகுகின்றது! இதை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன்; எனவே நான் நம்பிக்கை கொள்கிறேன்.

‘ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்து போகவில்லை! காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!’ ‘ஆண்டவரே என் பங்கு’ என்று என் மனம் சொல்கின்றது! எனவே நான் அவரில் நம்பிக்கை கொள்கின்றேன்.

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும், அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்! ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 103: 8,10. 13-14. 15-16. 17 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

அல்லது: (திபா 37: 39a): நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடம் இருந்தே வருகின்றது.

8
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
10
அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. - பல்லவி

13
தந்தை தம் பிள்ளைகள் மீது இரக்கம் காட்டுவது போல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.
14
அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது. - பல்லவி

15
மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள்.
16
அதன் மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது. - பல்லவி

17
ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர் மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள் மீதும் இருக்கும்.
18
அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும். - பல்லவி

இரண்டாம் வாசகம்

சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 51-57

சகோதரர் சகோதரிகளே,

இதோ, ஒரு மறைபொருளை உங்களுக்குச் சொல்கிறேன்; நாம் யாவரும் சாக மாட்டோம்; ஆனால் அனைவரும் மாற்று உருப் பெறுவோம்.

ஒரு நொடிப் பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும் போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்; நாமும் மாற்று உருப் பெறுவோம். ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.

அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்துகொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்: “சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?”

பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே. ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்தி வாசகம்

என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30

அக்காலத்தில்

இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 23-26

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களைப் பார்த்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.