முதல் வாசகம்
எனக்குச் செல்வம் வேண்டாம். வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 30: 5-9
கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக்கப்பட்டு நம்பத்தக்கதாய் விளங்குகிறது; தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு அவர் கேடயமாய் இருக்கிறார். அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் கூட்டாதே; கூட்டினால் நீ பொய்யன் ஆவாய்; அவர் உன்னைக் கடிந்து கொள்வார்.
வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன். மறுக்காதீர்; நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும். வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச் செய்யும்; எனக்குச் செல்வம் வேண்டாம். வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும். எனக்கு எல்லாம் இருந்தால், நான், “உம்மை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்து, “ஆண்டவரைக் கண்டது யார்?” என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 119: 29,72. 89,101. 104,163 (பல்லவி: 105a)பல்லவி: என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!
நற்செய்தி வாசகம்
இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல்நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6
அக்காலத்தில்
இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
அப்போது அவர்களை நோக்கி, “பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்றார். அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.